96 திரைப்படம் எப்படி இருக்கு ? விமர்சனம் !



 நடிகர்கள்: 

                   விஜய் சேதுபதி, திரிஷா கிருஷ்ணன், தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள்

இயக்குனர் :  

                       பிரேம் குமார்

திரைக்கதை :

             பயணப் புகைப்பட கலைஞர் கே.ராமசந்திரன் {விஜய் சேதுபதி}, தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு யதர்ச்சையாக வருகிறார். தான் படித்த பள்ளியை பார்த்த தருணத்தில் இருந்து, அவருடைய பால்ய கால காதல் நினைக்கு வருகிறது. உடனே தன்னுடன் பள்ளியில் படித்த அனைவரையும் பார்க்க ஆசைப்படுகிறார். ரீயூனியனுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ராமசந்திரந்திரனை பார்ப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறார் ஜானகி தேவி {திரிஷா}. இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த நெகிழ்வான தருணங்கள் அடங்கிய ஒரு காவியமே  96.

        கடந்த காலத்தில்  வந்த பல படங்களை போல இதுவும் ஒரு பிளாஷ் பேக் காதல் கதை தான். ஆனால் அதை கவித்துவமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரேம். அதனாலேயே கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கிறது இந்த படத்தில். ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ கவிதை போல் மனதின் அழத்திற்குள் சென்று,நம் பள்ளி பருவத்தை மீட்டுக்கொண்டு நம் கண் முன்னே நிறுத்துகிறது . வாழ்வின் பொக்கிஷமான அந்த பள்ளி நாட்களின் நினைவுகளை நம் மனதில் மீண்டும் கொண்டு வரும் விதத்தில் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் பிரேம். சண்டை காட்சிகள் இல்லை, அதிக  ரொமான்ஸ் காட்சிகள் இல்லை, வில்லன் இல்லை.வாய்ச் சண்டைக் கூட இல்லை, படம் மெதுவாக தான் நகர்கிறது. ஆனாலும் இருக்கையை விட்டு எழ மனம் வரவில்லை.நம்முள்ளும் ஒரு ராமசந்திரனும், ஜானகியும் நிச்சயம் இருந்திருப்பார்கள். அவர்களை நினைத்தபடியே படத்திற்குள் ஐக்கியமாகிவிடுகிறோம். இது தான் கதை, இது தான் க்ளைமாக்ஸ் என்று  நமக்கு நன்றாக தெரிந்திருந்தாலும், திரையைவிட்டு அகல கண் மறுக்கிறது.



நடிகர்கள் பற்றி :

விஜய் சேதுபதி : இவர் என்ன செய்தாலும் ரசிக்க முடிகிறது எப்படி என்பது தான் தெரியவில்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பார்த்து திரிஷா 'நீ ஒரு சரியான நாட்டுக்கட்டை டா" என்பார். அதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு இருக்கே..ச்சே வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி ரசித்திருப்போமா என தெரியவில்லை. விஜய் சேதுபதியின் நடிப்பை இந்த ஒரு பாராவுக்குள் விவரிக்க முடியாது. 

திரிஷா : இவரை தவிர இந்த படத்தில் வேறு யாரும் இல்ல... ஒரு பெண் ஒரு ஆணைப்பார்த்து கேட்க தயங்கும் கேள்வி "டேய் நீ வெர்ஜினா". சலனமின்றி கேட்டு நம்மையும் வெட்கப்பட வைக்கிறார். காதல் தவிப்பு, எதையோ இழந்துவிட்ட சோகம், தன்னால் தான் இப்படி என்ற குற்ற உணர்ச்சி என விண்ணை தாண்டி வந்திருக்கிறார். பல இடங்களில்        " விண்ணை தாண்டி வருவாயா " ஜெசியை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.




துணை நடிகர்கள் : தேவதர்ஷிணி - விஜய் சேதுபதிக்குமான அந்த உறவு, ச்சே சூப்பர் .நம் அனைவருக்குமே நிச்சயமாக அப்படி ஒரு சுபா இருப்பாள். இருவரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மிக அருமை. இயக்குனருக்கு இணையாக படத்தில் சம பங்கு வகித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் சண்முகமும், இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவும். பின்னணி இசையால் திரையில் தோன்றும் நடிகர்களின் மனநிலையை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் கோவிந்த். பாடல்கள் எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தாலும், இளையராஜா தான் படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார். தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது 'தென்றல் வந்து தீண்டும்போது' பாடலை தான் வாய் முணுமுணுக்கும் .

என் பார்வை :
      படம் மிக மெதுவாக நகர்வது மட்டுமே கொஞ்சம் அலுப்பை  தருகின்றது. ஆனால் விஜய் சேதுபதியும், திரிஷாவும் அதை பேலன்ஸ் செய்துவிடுவதால், சிறிது நேரத்தில் அந்த குறையும் காணாமல் போகிறது.
எனவே  பள்ளி பருவ சந்தோஷ நினைவுகளை மீட்க நினைக்கும் எல்லோரும் இந்த "96" க்கு போய் வரலாம். 

நன்றி , 

அணைத்து திரைப்பட விமர்சனத்தை அறிய உங்கள் மின்னஞ்சலை பதிவிடவும்...



      






96 திரைப்படம் எப்படி இருக்கு ? விமர்சனம் ! 96  திரைப்படம்  எப்படி இருக்கு ? விமர்சனம் ! Reviewed by Vaigai Tamil on October 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.